செய்திகள்

பாகிஸ்தான்: கொடூர குற்றம் புரிந்த 4 தாலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

Published On 2017-04-25 08:16 GMT   |   Update On 2017-04-25 08:16 GMT
பாகிஸ்தான் நாட்டில் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 4 தாலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவர்கள் மீதான குற்றங்களை விசாரிக்கவும், தண்டனைகளை வழங்கவும் ராணுவ நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், ராணுவ ஆட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த பின்னர் ராணுவ நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டன.

கடந்த 2014-ம் ஆண்டில் பெஷாவர் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதனால், அந்நாட்டு அரசு மீண்டும் ராணுவ நீதிமன்றங்களை அமைப்பதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.



இந்நிலையில், தடை செய்யப்பட்ட தெரிக்-இ-தாலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்களில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த ராணுவ நீதிமன்றம், நால்வருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கைபர் மாகாணத்தில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு தீவிரவாதிகளுக்கும் இன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஆகிப் காபூர் தெரிவித்துள்ளார்.

Similar News