செய்திகள்

சீனாவின் முதல் சரக்கு விண்கலம் விண்வெளியில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்தது

Published On 2017-04-22 05:58 GMT   |   Update On 2017-04-22 05:58 GMT
விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக முதன்முதலாக சீனா தயாரித்து அனுப்பிய ‘டியான்ஸோ-1’ சரக்கு விண்கலம் இன்று விண்வெளியில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்தது.
பீஜிங்:

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதனையடுத்து, ‘ஷென்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டது.

இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி காலை 7.30 மணியளவில் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள ஜிக்குவான் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விண்கலத்தில் சீன விண்வெளி ஆய்வாளர்களான ஜிங் ஹெய்பெங்(50), சென் டாங்(37) ஆகியோர் சென்றனர். அவர்கள் இருவரும் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்பட்டால், ரஷியாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை நிலைநாட்டிய பெருமை சீனாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக சரக்கு விண்கலம் ஒன்றை சீனா தயாரித்தது. ‘டியான்ஸோ-1’ (Tianzhou-1) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், திரவ நிலையில் இருக்கும் பிராண வாயு மற்றும் மண்ணெண்ணையினால் இயங்கும் (Long March-7 Y2 carrier rocket) ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.


10.6 மீட்டர் நீளத்தில் குழாய் வடிவில் உள்ள இந்த விண்கலம், செயற்கைக்கோள் உள்பட சுமார் 6 டன் எடையுள்ள சரக்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகும். மேலும், விண்வெளியில் தங்கிருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் எதிர்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிநவீன சாதனங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹைனான் தீவில் உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை இரவு 7.41 மணியளவில் ‘டியான்ஸோ-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தற்போது விண்வெளியில் சுற்றியவாறு பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘டியான்ஸோ-1’ விண்கலம் இன்று  இணைக்கப்பட்டதாக சீன விண்வெளித்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

Similar News