செய்திகள்

சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் வேண்டுகோள்

Published On 2017-04-17 03:57 GMT   |   Update On 2017-04-17 03:57 GMT
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
வாடிகன் சிட்டி:

ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து உருக்கத்துடன் குறிப்பிட்டார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசும்போது கூறியதாவது:-


போர், பஞ்சம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமை ஆகியவற்றால் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா நாட்டு மக்கள் மீது தொடர்ந்து பயங்கரம் விதைக்கப்படுகிறது. அவர்கள் மரணத்தை சந்தித்து வருகின்றனர். தப்பியோடிய சிரியா அகதிகள் மீது மிக இழிவான தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல் ஏசுநாதர் அவதரித்த புனித பூமி மற்றும் ஈராக், ஏமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவிடவேண்டும். உலக நாடுகளின் தலைவர்கள் ஆயுத வியாபாரத்தை கைவிட்டு அமைதியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News