செய்திகள்

விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை

Published On 2017-02-20 12:58 GMT   |   Update On 2017-02-20 12:58 GMT
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டன் நாட்டுக்கு தப்பிவந்த விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
லண்டன்:

கிங் பிஷர் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் பிரிட்டன் நாட்டுக்கு தப்பி வந்து விட்டார்.

அவருக்கு அதிகப்படியான தொகையை கடனாக அளித்துள்ள ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு அவர் 900 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளது. இதுதொடர்பாக, அவர் மீது தொடரப்பட்ட கடன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராக தவறிய அவர்  வேண்டும் என்றே பண மோசடி செய்து, கடனை திருப்பி செலுத்தாத நபராக  அறிவிக்கப்பட்டார்.

வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற பணத்தை சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக குற்றம்சாட்டிய பொருளாதார அமலாக்கத்துறையும் அவரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய சம்மன் அனுப்பியது. ஆனால், விஜய் மல்லையா இதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகிறார்.

இதையடுத்து, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் லண்டனில் வசித்துவரும் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவர கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை பரிசீலித்த இந்திய உள்துறை அமைச்சகம் தற்போது அந்த உத்தரவை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இன்று அனுப்பி வைத்துள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையே கடந்த 1992-ம் ஆண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரு நாட்டு அரசுகளாலும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைக்க இந்த உடன்படிக்கை வழிவகை செய்கிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சத்தின்படி இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அவரை கைது செய்யும் விவாரம் தொடர்பான கோப்புகள் இன்று வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை உடனடியாக கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News