செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கார் விபத்து: இந்தியப்பெண் கவலைக்கிடம்

Published On 2017-01-23 19:36 GMT   |   Update On 2017-01-23 19:36 GMT
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் நேத்ரா கிருஷ்ணமூர்த்தி (வயது 30) உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வந்த நேத்ரா கிருஷ்ணமூர்த்தி சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு தனது 8 மாத ஆண் குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதில் அவரது மண்டை உடைந்ததோடு, நுரையீரல், கல்லீரல் சிறுநீரகம் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் இந்த விபத்தில் அவரது குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. நேத்ரா கிருஷ்ணமூர்த்திக்கு கணவர் மற்றும் குழந்தையை தவிர வேறு எந்த சொந்தமும் கிடையாது. எனவே அவரது மருத்துவ செலவுக்காகவும், அவரது குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கவும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன.

இதற்கிடையே அந்த மர்ம நபர் காரை ஒரு இடத்தில் இருந்து திருடி சென்றபோது விபத்தை ஏற்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அந்த நபர் இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News