செய்திகள்

சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகம்

Published On 2016-12-07 07:11 GMT   |   Update On 2016-12-07 07:11 GMT
‘குண்டு வீச்சில் எனது வீடு முடிந்துவிட்டது’ என சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகத்துடன் கூறிய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
டமாஸ்க்ஸ்:

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர். இருந்தும் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. அலைப்போ நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்க ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது.

அரசு ராணுவத்துக்கு ரஷியா பகிரங்கமாக ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அங்கு கடுமையாக குண்டு வீசப்படுகிறது. அதில் பலரது வீடுகள் இடிந்து தரைமட்டமாகின்றன.

இந்த நிலையில் போரின் கொடூரம் குறித்து கிழக்கு அலைப்போ நகரில் வசிக்கும் பானா அல்-அபெத் என்ற 7 வயது சிறுமி டுவிட்டரில் படத்துடன் விவரித்து இருக்கிறாள்.

அதில் அலைப்போவில் குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது. இதனால் அச்சத்தில் வாழ்கிறோம். குண்டு வீச்சில் எனது வீடு இடிந்து தரைமட்டமாகிவிட்டது. எனவே வேறு பகுதியில் தங்கியிருக்கிறோம்’ என உருக்கமாக தெரிவித்து இருக்கிறாள்.

பானா தனது நோட்டு புத்தகத்தில் குறுக்கலாக எழுதி வைத்ததை அவளது தாயார் பாத்திமா டுவிட்டரில் செய்தியாக அனுப்பி இருக்கிறாள். தாயும், மகளும் டுவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளனர்.

அதில் சிரியாவில் நடைபெறும் போர் செய்திகளை படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். இதனால் இவர்களை 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

தற்போது இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். 7 வயது சிறுமியின் இந்த தகவல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Similar News