செய்திகள்

ஈரான்: இரு ரெயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 15 பேர் பலி

Published On 2016-11-25 08:46 GMT   |   Update On 2016-11-25 10:29 GMT
ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்தில் இன்று இரு ரெயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்திற்குட்பட்ட ஷரவுட் நகரையொட்டியுள்ள ஹப்-கான் ரெயில் நிலையம் வழியாக (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7.40 மணியளவில் எதிரெதிர் திசைகளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இரு ரெயில்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் இணைந்து நேருக்குநேராக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் இரு ரெயில்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தீபிடித்து எரியத் தொடங்கின. இந்த கோரவிபத்தில் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Similar News