செய்திகள்

வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் கிராமங்களில் தாக்குதல்: வீடுகள்-கோவில்களுக்கு தீ வைப்பு

Published On 2016-11-05 10:25 GMT   |   Update On 2016-11-05 10:26 GMT
வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் மற்றும் கோவில்களுக்கு தீ வைக்கப்பட்டது.

டாக்கா:

வங்காளதேசத்தில் மைனாரிட்டியாக வாழும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிராமன்பரியா மாவட்டத்தில் பெரும்பாலாக இந்துக்கள் உள்ளனர்.

உபாசிலா நகரம் அருகேயுள்ள மத்கயாபரா, தக்ஷின் பரா ஆகிய இந்து கிராமங்களில் தீவிரவாதிகள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதற்கிடையே அப்பகுதியில் 7 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. கோவில்களும் இடித்து சேதப்படுத்தப்பட்டன.

இதனால் அங்கு வாழும் இந்துக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே அங்கு விரைந்து வந்த போலீசார் வன்முறை கும்பலை அடித்து விரட்டினர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி மத அவமதிப்பு செய்ததாக கூறி அதே பகுதியில் ஒருகும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் 100 பேர் காயம் அடைந்தனர். இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன.

Similar News