செய்திகள்

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

Published On 2016-10-24 05:16 GMT   |   Update On 2016-10-24 05:16 GMT
ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாக்தாத்:

ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பாராளுமன்றத்தில் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் இத்தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இத்தடையை மீறுபவர்களுக்கு (25 மில்லியன் ஈராக் தினார் (ரூ.15 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு எத்தனை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொதுவாக ஈராக்கில் பெரிய நகரங்களில் கிறிஸ்தவர்களால் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஷியா பிரிவினரின் புனித முகரம் மாதம் என்பதால் அவை மூடப்பட்டுள்ளன. இந்த விடுமுறை முடிந்த பிறகு தான் மதுபான கடைகள் தடை விவகாரம் குறித்து முழுமையாக தெரியவரும்.

Similar News