செய்திகள்

ஆப்கான் அரசு - தலிபான்கள் இடையே கத்தாரில் ரகசிய பேச்சுவார்த்தை

Published On 2016-10-18 16:23 GMT   |   Update On 2016-10-18 16:23 GMT
ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டில் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே உள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே கடந்த மே மாதம் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் முன்னாள் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடைமுறைகள் முற்றிலும் முடங்கியது.

இந்நிலையில், நீண்டகாலமாக முடங்கி கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியாக தற்போது அரசு அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு முறை ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது அமைதி பேச்சுவார்த்தைக்கான நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

தலிபான்களின் அரசியல் அலுவலகம் அமைந்துள்ள தோகா நகரில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஆப்கானிஸ்தான் தேசிய ஐக்கிய அரசு அதிகாரி ஒருவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் நிறுவனரும் நீண்டகாலமாக தலைவராக இருந்து 2013ம் ஆண்டு மறைந்தவருமான முல்லா ஒமரின் சகோதரர் முல்லா அப்துல் மனன் அகுந்த் கலந்துகொண்டதாக கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மூத்த தூதர் ஒருவர் பங்கேற்றதை தலிபான் அதிகாரி கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து தலிபானோ, அமெரிக்க அரசாங்கமோ அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

Similar News