செய்திகள்

சிரியாவில் ராணுவம் வான்தாக்குதல்: ஐ.நா.மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம்

Published On 2016-09-27 03:04 GMT   |   Update On 2016-09-27 03:04 GMT
சிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.
பெய்ரூட்:

சிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு உள்ள சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்தாக்குதல்களை நடத்தி வந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உள்நாட்டுப்போர் நடந்து வந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் தலையீட்டால் அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அதிபரின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வந்திருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 12-ந்தேதி முதல் அங்கு தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக ரஷியாவும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அலெப்போ நகரில் அரசு படைகள் நடத்திய மிகப்பெரிய வான்தாக்குதல்களால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

சிரியாவின் வடபகுதியில் உள்ள முக்கிய நகரான அலெப்போவில் சுமார் 2½ லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் நேற்று முன்தினம் அரசுப்படைகள் திடீரென போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்தன. குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

அந்தவகையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பல மணிநேரம் தொடர்ந்த இந்த வான்தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்கும் பணிகளில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

ஆனால் போர் விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமிட்ட படியே இருந்ததால் மீட்புபணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் ரத்தம் போன்றவை குறைவாக இருப்பதால் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் பேசிய அவர், இந்த தாக்குதலால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்றும் கூறினார். மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க தூதர் சமந்தா பவர், ‘சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக ரஷியாவும், அதிபர் ஆசாத்தும் போரை நடத்தி வருகின்றனர். அங்கு ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல, மாறாக காட்டுமிராண்டித்தனம்’ என்று கூறினார்.

முன்னதாக இந்த தாக்குதலை கண்டித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மேத்யூ ரிகிராப்ட் மற்றும் அமெரிக்கா, பிரெஞ்சு தூதர்கள் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News