செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதம்: பில் கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு

Published On 2016-09-26 07:29 GMT   |   Update On 2016-09-26 07:29 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேரடி விவாத நிகழ்ச்சிக்கு ஹிலாரியின் கணவர் கிளிண்டனின் முன்னாள் காதலிக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் இன்று நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் இன்று இரவு 9 மணி முதல் 10-30 மணி வரை நடக்கிறது.

இந்த விவாதம் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதை 10 கோடி பேர் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் நேருக்கு நேர் விவாதத்தினால் யாருக்கு வாக்களிப்பது என ஊசலாட்டத்துடன் இருக்கும் வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள் என கருதப்படுகிறது.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி கொள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்த விவாதத்தில் பங்கேற்கும்படி ஹிலாரி கணவர் கிளிண்டனின் முன்னாள் காதலி ஜெனீபர் பிளவர்ஸ் என்பவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன் ஆர்கன்காஸ் மாகாண கவர்னராக இருந்தார். அப்போது அவர் ஜெனீபர் பிளவர்சை காதலித்தார். இவர்கள் இருவரும் 12 வருடங்கள் காதலித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே செக்ஸ் உறவும் இருந்தது. அதிபரான போது இதை மறுத்த கிளிண்டன் 1998-ம் ஆண்டில் இதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் இன்று நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கும் பிளவர்சை பார்வையாளர்கள் வரிசையில் முதல் வரிசையில் அமரவைத்து தனது எதிரி ஹிலாரிக்கு அதிர்ச்சியையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த டிரம்ப் திட்டமிட்டார்.

அதன்படி டிரம்ப் விடுத்த அழைப்பை பிளவர்ஸ் ஏற்றுக் கொண்டார். இது குறித்து டிரம்புக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார். நான் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இன்று இரவு நடைபெறும் நேரடி விவாதத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என உறுதி அளித்துள்ளார்.

Similar News