செய்திகள்

சீனாவில் 30 கால்பந்து மைதானம் அளவிலான மிகப்பெரிய தொலைநோக்கி இன்று நாட்டுக்கு அர்ப்பணம்

Published On 2016-09-25 08:29 GMT   |   Update On 2016-09-25 08:29 GMT
பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
பீஜிங்:

பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி  500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்டதாகும். இதில் 34 அடிநீளம் கொண்ட தகடுகள் அமைப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும். இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

30 கால்பந்து மைதானம் அளவிலான இந்த தொலைநோக்கியை அமைப்பது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே சீன விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கடந்த 2011-ம் ஆண்டு பணிகள் தொடங்கி, தற்போது, 1.2 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் 1264 கோடி ரூபாய்) செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4450 பிரதிபலிப்பான்களை (panel reflector) கொண்ட இந்த தொலைநோக்கியை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 8 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய்) மற்றும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் 600 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த ராட்சத தொலைநோக்கி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முதல்நாளான இன்று ஏராளமான விஞ்ஞானிகளும், விண்வெளி ஆய்வாளர்களும் இந்த தொலைநோக்கியின் பயன்பாட்டை கண்டு மகிழ்ந்தனர்.

Similar News