செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2016-09-24 13:03 GMT   |   Update On 2016-09-24 13:03 GMT
இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கம், ராணுவத்துக்குமிடையே நடைபெற்ற போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரின்போது தமிழர்களிடம் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக கைப்பற்றப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதுபற்றி தமிழ் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ் மக்கள் தேசிய முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசும்போது, “போர் முடிவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழ் மக்களின் குறைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கவில்லை” என்றார்.

தமிழர்கள் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை அரசு நிறுத்த வேண்டும், புத்த மதக் கோவில்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும், ராணுவ பயன்பாட்டிற்காக தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், காணாமல் போனவர்களை கண்டறிய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News