செய்திகள்

கருப்பர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் 2-வது நாளாக கலவரம் - அவசர நிலை பிரகடனம்

Published On 2016-09-22 06:28 GMT   |   Update On 2016-09-22 06:28 GMT
கெய்த் லேமண்ட் ஸ்கார்ட் சுட்டுக்கொல்லப்பட்டதால் கருப்பர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தற்போது 2-வது நாளாக அங்கு கலவரம் நடந்து வருகிறது. கலவரம் மேலும் பரவி வருவதால், வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அந்த மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.
கரோலினா:

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மகாணத்தில் உள்ளது சார்லோட் நகரம். இந்த ஊரை சேர்ந்தவர் கெய்த் லேமண்ட் ஸ்கார்ட் (வயது 43).

கருப்பினத்தை சேர்ந்த இவர் மீது குற்ற வழக்கு ஒன்று இருந்தது. இதற்காக அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போடும்படி போலீசார் கூறினார்கள்.

ஆனால் கெய்த் லேமண்ட் ஸ்கார்ட் துப்பாக்கியை போட மறுத்துவிட்டார். இதனால் போலீசார் அவரை நோக்கி சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் இதுபோல கருப்பர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போராட்டங்களும் தொடர்ந்து நடக்கின்றன.

இந்த நிலையில் கெய்த் லேமண்ட் ஸ்கார்ட் சுட்டுக்கொல்லப்பட்டதால் கருப்பர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கெய்த் லேமண்ட் ஸ்கார்ட் துப்பாக்கியை காட்டி மிரட்டவில்லை. அவர் புத்தகம் படித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் கருப்பர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர்கள் சார்லோட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மறியல் நடந்தது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். அதில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது.

தற்போது 2-வது நாளாக அங்கு கலவரம் நடந்து வருகிறது. வடக்கு கரோலினா மாகாணம் முழுவதும் கலவரம் பரவி இருக்கிறது. ஆங்காங்கே கருப்பர்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். சார்லோட் நகரில் கருப்பர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 14 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

கலவரக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கருப்பர் ஒருவர் படுகாயம் அடைந்தார். கரோலினா பல்கலைக்கழக மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சரக்கு வாகனம் ஒன்றுக்கு தீவைத்தனர். அவர்களை கட்டுப்படுத்தவும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

கலவரம் மேலும் பரவி வருவதால், வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அந்த மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார். இதனால் மாகாணம் முழுவதும் பதட்ட நிலை உருவாகி உள்ளது.

Similar News