செய்திகள்

அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு வெள்ளை மாளிகை கவுரவம்

Published On 2016-08-24 00:29 GMT   |   Update On 2016-08-24 00:29 GMT
‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ கவுரவத்துக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளி பெண்கள். அவர்கள், கலிபோர்னியாவை சேர்ந்த அஞ்சலி திரிபாதி, சிகாகோவை சேர்ந்த டினா ஆர். ஷா ஆவார்கள்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் தேர்ச்சியும், ஆற்றலும், வல்லமையும் மிக்கவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ கவுரவம் வழங்கும் வழக்கத்தை 1964-ம் ஆண்டு, ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சன் ஏற்படுத்தினார்.

இந்த கவுரவத்தை பெறுவதற்கு அமெரிக்க மக்களிடையே பலத்த போட்டி நிலவுவது வழக்கம்.

இந்த ஆண்டு, ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ கவுரவத்துக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளி பெண்கள். அவர்கள், கலிபோர்னியாவை சேர்ந்த அஞ்சலி திரிபாதி, சிகாகோவை சேர்ந்த டினா ஆர். ஷா ஆவார்கள்.

அஞ்சலி திரிபாதி, வானியல் அறிஞர் ஆவார். இவர், பால்வீதி மண்டலத்தின் மாதிரியை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வானியலில் பி.எச்.டி. பட்டம் பெற உள்ளார்.

டினா ஆர். ஷா மருத்துவர் ஆவார். குறிப்பாக அவர், நுரையீரல் மற்றும் நெருக்கடி கால கவனிப்பு துறையில் வல்லுனர். இவர், நீண்ட கால நோய்களை தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இருவரும் தத்தமது துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி பெயர் பெற்றிருக்கிற நிலையில், இப்போது அவர்களுக்கு ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ அறிவிக்கப்பட்டிருப்பது, மணி மகுடமாக அமைந்துள்ளது.

Similar News