செய்திகள்

அரசு வாகனத்தை ஒப்படைக்காத இலங்கை முன்னாள் எம்.பி. கைது

Published On 2016-07-29 13:51 GMT   |   Update On 2016-07-29 13:51 GMT
இலங்கையில் அரசு வாகனத்தை ஒப்படைக்காதாதால் அம்பாரை மாவட்ட முன்னாள் எம்.பி.யான பியசேனா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் கடந்த ஆட்சியின்போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தன. அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் உரிய அமைச்சகத்தில் திரும்ப ஒப்படைக்கும்படி கூறப்பட்டது. அவ்வகையில், எம்.பி.யாக இருந்த பியசேனாவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வாகனத்தை திரும்ப ஒப்படைக்காமல் முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கொழும்பு கொள்ளுபிட்டி காவல் நிலையத்திற்கு நேற்று அந்த வாகனத்தை போலீசார் வரவழைத்து பறிமுதல் செய்ததுடன், டிரைவரை கைது செய்தனர். பின்னர், பியசேனா இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு இவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தார். 2015-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Similar News