தமிழ்நாடு

வந்தவாசி அருகே உலகின் 2-வது பெரிய பாகுபலி சிலை திறப்பு

Published On 2023-05-11 05:25 GMT   |   Update On 2023-05-11 05:25 GMT
  • கர்நாடக மாநிலம் சரவணபெலகுளாவில் 57 அடி உயரமுள்ள பாகுபலி சிலைதான் உலகில் அதிகம் உயரம் கொண்டது.
  • ராட்சத கிரேன் உதவியுடன் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பாகுபலி சிலை கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஜெயின் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன் பகுதியில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சிலை வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி கல் சிலை வடிவமைப்பதற்காக கொடுக்கப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது.

இந்த சிலை 20 டயர் கொண்ட லாரியில் பொன்னூர் கிராமத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. பாகுபலி சிலை மகாபலிபுரத்திலிருந்து மேல் மருவத்தூர், கீழ்கொடுங்கலூர், வந்தவாசி, திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்ரோடு வழியாக பொன்னூர் வந்தது. வழி நெடுக ஜெயின் பக்தர்கள் தீபாராதனை செய்து பாகுபலி சிலையை வழிபட்டனர்.

கர்நாடக மாநிலம் சரவணபெலகுளாவில் 57 அடி உயரமுள்ள பாகுபலி சிலைதான் உலகில் அதிகம் உயரம் கொண்டது.

இப்போது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா பொன்னூர் கிராமத்தில் உள்ள ஜெயின் கோவில் முன்பு 24 அடி உயரம் கொண்ட 2-வது பெரிய பாகுபலி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று ராட்சத கிரேன் உதவியுடன் சுமார் 8 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பாகுபலி சிலை கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது ஜெயின் மதத்தைச் சேர்ந்த துறவிகள், சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், போளூர், ஆரணி, செஞ்சி, ஓதலவாடி, தேவிகாபுரம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான ஜெயினர்கள் கலந்து கொண்டு பாகுபலியை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News