தமிழ்நாடு

சென்னையில் நாளை திருமாவளவன் மணிவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2022-08-15 09:05 GMT   |   Update On 2022-08-15 09:05 GMT
  • தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிகிறார்கள்.
  • பிறந்த நாள் மணி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். நாளை மறுநாள் 17-ந்தேதி அவருக்கு 60-வது பிறந்த நாளாகும்.

பிறந்த நாள் மணி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், போன்றவை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (16-ந் தேதி) மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு தொடங்கும் விழா நள்ளிரவு வாழ்த்துப் பொழிவு, கவிப்பொழிவு, இசைப் பொழிவு, கருத்துப் பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

முதலில் நடைபெறும் வாழ்த்து பொழிவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லகண்ணு தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை, ரவிக்குமார் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முதன்மை செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், தலைைம நிலைய செயலாளர்கள் தகடூர் தமிழ்செல்வன், பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் வரவேற்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

பின்னர் புதுவை சித்தனின் மக்கள் இசைக்குழு, ஜாகீன் உசேன் குழுவினரின் நடனம் ஆகியவை நடக்கிறது.

தொடர்ந்து அறுபது, எழுபதும் என்ற தலைப்பில் கவிப்பொழிவு கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் நடக்கிறது. கவியரங்கத்தை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்து பேசுகிறார்.

கவிஞர் கபிலன் சிறப்பு கவிதை வாசிக்கிறார். இதையடுத்து சமத்துவம் உயர்த்துவோம் என்ற தலைப்பில் கருத்து பொழிவு கல்கி பிரியன் தலைமையில் நடக்கிறது.

இதில் கவிதா முரளிதரன், நாராயணன், எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோர் பேசுகிறார்கள். "சங்கத்துவம் வீழ்த்துவோம்" என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.

இதில் பத்திரிகையாளர்கள் ஆர்.மணி, பேராசிரியை பர்வீன் சுல்தானா, செந்தில்வேல் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை வன்னியஅரசு, எழில் கரோலின், கவுதம சன்னா, ரஜினிகாந்த், பூவிழியன், பாவலன், மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, இரா.செல்வம், அம்பேத் வளவன், அன்பு செழியன், ரவிசங்கர், ஆதவன் ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள்.

திருமாவளவனின் மணி விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னையில் குவிகிறார்கள்.

Similar News