தமிழ்நாடு

சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

தேனி மாவட்டத்தில் கனமழை- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2022-12-14 04:47 GMT   |   Update On 2022-12-14 04:47 GMT
  • கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
  • போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் சாரல்மழை பெய்தபடி இருந்தது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கூடலூர், உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. போடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவியில் சீரான குடிநீர் இருந்ததால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி சென்றனர்.

தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் சாரல்மழை பெய்தபடி இருந்தது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எதுவும் இல்லாததால் மாணவ-மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

பெரியாறு 3.6, தேக்கடி 2.8, கூடலூர் 3.8, சண்முகாநதி 16, உத்தமபாளையம் 4.8, போடி 19.6, வைகை அணை 1.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 1, ஆண்டிபட்டி 13.2 மி.மீ மழையளவு பதிவானது.

Tags:    

Similar News