தமிழ்நாடு

வேடசந்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட செக்கு உரல்.


வேடசந்தூர் அருகே 11-ம் நூற்றாண்டு செக்கு உரல் கண்டுபிடிப்பு

Published On 2022-08-15 04:24 GMT   |   Update On 2022-08-15 04:24 GMT
  • வேடசந்தூர் சுற்றிய பகுதிகள் பள்ளி நாடு என்ற நாட்டுப்பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது.
  • பாறையில் போத்தநாச்சிஉரல் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள தொண்ணிக்கல்பட்டி குடகனாற்றங்கரையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு உரல் கல்வெட்டை வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

வேடசந்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அளித்த தகவலின் படி மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் மாணிக்க ராஜ், உதயகுமார், கருப்பையா ஆகியோர் இந்த கல்வெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் அவர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தின் தென் பகுதியில் ஆட்சி செய்த பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நிர்வாக வசதிக்காக பல பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தனர்.

அதன்படி வேடசந்தூர் சுற்றிய பகுதிகள் பள்ளி நாடு என்ற நாட்டுப்பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. குடகனாறு ஆற்றின் கரைகளில் கற்காலம் முதல் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு அப்பகுதியில் இது வரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் தடயங்களும் தொல் மேடுகளும் சான்றாக அமைந்துள்ளன.

இப்பகுதியில் தொன்மையான வரலாற்றுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தனிப்பாறை ஒன்றில் சென்று உரல் ஒன்று வெட்டி அதன் மேல் பகுதியில் இரு வரிகளில் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் அருகிலேயே மற்றொரு பாறையில் போத்தநாச்சிஉரல் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்பாட்டுக்காக சோழர் பாண்டிய பல்லவராயர் மகன் போத்தவீமனும், மகள் போத்தநாச்சியும் இந்த செக்கை செய்து கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது என்றனர்.

Similar News