தமிழ்நாடு

எண்ணூர் அருகே தாமரைக்குளம் ஏரி ஆக்கிரமிப்பு- 53 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Published On 2022-12-06 10:04 GMT   |   Update On 2022-12-06 10:04 GMT
  • தாமரைக்குளத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
  • ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை:

எண்ணூர் அருகே உள்ள கத்தி வாக்கத்தில் தாமரைக் குப்பம் உள்ளது. காமராஜர் நகர், திருவள்ளூர் நகர், உலகநாதபுரம், சத்யவானி முத்து நகர் உள்ளிட்ட 7 இடங்களில் இருந்து வரும் மழைநீர் வருவது வழக்கம்.

இந்த நிலையில் தாமரைக்குளத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் 10 ஏக்கரில் இருந்த குளம் தற்போது 2 ஏக்கராக சுருங்கி விட்டது. மேலும் சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீ்ர் மற்றும் குப்பைகள் குளத்துக்குள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசு அடைந்து விடுகிறது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி அளித்த பதிலில், திருவொற்றியூர் தாசில்தார் கடந்த ஏப்ரல் மாதம் கத்திவாக்கம் பகுதியில் ஆய்வு செய்து தாமரைக்குளம் ஏரியில் 53 ஆக்கிரமிப்புகள் இருப்பதை உறுதி செய்தார். ஏரிப்பகுதியில் பள்ளிக்கட்டிடம், மாநகராட்சி சாலையும் உள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அனைத்து உதவிகளையும் வருவாய்த்துறை செய்ய தயாராக உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோல் சென்னை மெட்ரோ வாட்டர் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறும்போது, 'அப்பகுதியில் உள்ள 373 வீடுகளில் 258 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்குவது முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணி முழுவதும் முடிந்ததும் கழிவு நீர் முழுவதும் தாமரை குப்பதில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்துக்கு திருப்பி விடப்படும்' என்றும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி முன்னாள் அ. தி. மு. க கவுன்சிலர் பேராசிரியை எழிலரசி கூறியதாவது:-

தாமரைகுளம் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த தாமரை குளம் அப்பகுதியை சேர்ந்த ஏழு கிராம மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. தற்போது கழிவுநீர் குளத்தில் விடப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் முழுவதும் கெட்டு எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த குளத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.எனவே அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மீதமுள்ள தாமரை குளத்தை பாதுகாக்க கழிவு நீரை குளத்தில் விடாமல் தடுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பாதாள சாக்கடையில் கழிவுநீரை விடும்படி எச்சரித்து குளத்தை தூர்வாரி சுற்றி சுவர் எழுப்பி பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்க வேண்டும். மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் மூலம் எண்ணூர் ஆற்றில் விட்டு அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Similar News