தமிழ்நாடு

அண்ணாசாலையில் மருந்து வியாபாரியை வெட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி- 6 பேர் கும்பல் துணிகரம்

Update: 2022-06-28 06:08 GMT
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவபாலன்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாசாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவபாலன். பிடெக்., பயோடெக் பட்டதாரியான இவர் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு ரூ.20 லட்சத்து 22 ஆயிரம் பணத்துடன் ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பர் வினோத்தை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவபாலன் சென்று கொண்டிருந்தார்.

அண்ணாசாலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து சிவபாலனை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து அண்ணாசாலை போலீசில் சிவபாலன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாசாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். படுகாயமடைந்த சிவபாலன் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவபாலன், மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனை நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தற்போது சிறிய அளவில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை தொடங்க இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவதற்காக சொந்த ஊர் சென்று தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் மொத்தம் ரூ.20.22 லட்சம் பணம் வாங்கி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழிலுக்காகத்தான் பணம் கொண்டு வந்தாரா? மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்கிறேன் என்ற பெயரில் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்து வருபவரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News