தமிழ்நாடு

காசிமேட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மீன் விற்பனை

Update: 2022-10-03 11:16 GMT
  • திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • வெளிநாட்டில் காசிமேடு மீன்களுக்கு தனி மவுசு உண்டு.

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிய செலாவணியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் முக்கிய பங்காற்றி வருகின்றன.

வெளிநாட்டில் காசிமேடு மீன்களுக்கு தனி மவுசு உண்டு. இங்கிருந்து வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளை வவ்வால், டைகர் இறால் போன்ற மீன்களுக்கு வெளி நாட்டில் நல்ல விலை உண்டு.

அதுமட்டுமில்லாமல் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூடுவது வழக்கம்.

அதேபோன்று நேற்று தொடர் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் வாங்க பொது மக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். சமீப காலங்களில் கடுமையான டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக 30 சதவீத விசைப் படகுகளே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 20 சதவீத விசைப்படகுகள் கரை திரும்பின. 150-ல் இருந்து 200 டன் வரை நேற்று மீன் விற்பனை நடைபெற்றது. அதிகாலை முதலே மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறை முகத்திற்கு மீன் பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்தனர்.

இதே போன்று சுற்று வட்டார பகுதிகளில் சில்லரை விலையில் மார்க்கெட் பகுதிகளில் மீன் விற்பனை செய்வதற்காக மீனவ பெண்கள் மீன்களை வாங்குவதற்காக கூடி இருந்தனர். காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலும் மீன் விற்பனை நடைபெற்றது.

விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று திரும்பி வந்த நிலையில் பெரிய மீன்களான வஞ்சிரம், வவ்வால் ஷீலா, திருக்கை, பால் சுறா, தோல்பாறை, கோலா மீன் உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது விலையும் உயர்ந்து காணப்பட்டது.

நெத்திலி கிலோ ரூ.250 முதல் வெள்ளை ஊடான் கிலோ ரூ.150, காரப்பொடி கிலோ ரூ.100, இறால், நண்டு, கடம்பா போன்றவை ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டது.

Similar News