தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே கட்டைப்பையில் வைத்து பஸ்சில் விட்டுச் செல்லப்பட்ட சிசு- தப்பியோடிய பெண்ணுக்கு வலை

Published On 2022-10-07 06:03 GMT   |   Update On 2022-10-07 06:03 GMT
  • பைக்குள் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருந்தது.
  • அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை கடத்தி வரும் போது போலீசுக்கு பயந்து பாதியிலேயே விட்டுச் சென்றாரா என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செம்பட்டி:

பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வேலுமணி (வயது 40). இவர் வத்தலக்குண்டுவில் இருந்து செம்பட்டிக்கு பஸ்ஸில் வந்தார். இவருக்கு அருகில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் அமர்ந்திருந்தார். அவரது கையில் ஒரு கட்டைப்பை இருந்தது. செம்பட்டி பஸ் நிலையம் வந்தவுடன், அந்த 20 வயது பெண், பஸ்சிலிருந்து கீழே இறங்கி வேகமாக சென்று விட்டார். ஆனால் அவர் கொண்டு வந்த கட்டைப்பை அதே இடத்தில் இருந்தது. பஸ்சை விட்டு இறங்கி ஏதேனும் பொருட்கள் வாங்க செல்வார் என்று நினைத்த வேலுமணி அவர் வராததால் சந்தேகமடைந்தார். சற்று நேரத்தில் அவர் விட்டுச் சென்ற கட்டைப்பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து கட்டைபையை எடுத்து திறந்து பார்த்தபோது, பைக்குள் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருந்தது. இது குறித்து வேலுமணி பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்தக்குழந்தை செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின் ஆத்தூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக்குழந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

குழந்தையை கட்டைப்பையில் வைத்து பஸ்சில் எடுத்து வந்தது அவரது தாயா? அல்லது வேறு யாராவது இருக்குமா? என்று செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத முறையில் பிறந்த குழந்தையை வீசி செல்ல வந்தாரா? அல்லது அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை கடத்தி வரும் போது போலீசுக்கு பயந்து பாதியிலேயே விட்டுச் சென்றாரா? என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News