தமிழ்நாடு
பாளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நேரு கலையரங்கத்தை சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

காலாவதியான ரூ.700 கோடி மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி

Update: 2022-06-29 09:32 GMT
  • பாளையங்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிக்கு சென்று பார்வையிட்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
  • பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

நெல்லை:

தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் குழு உறுப்பினர்கள் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

இன்று காலை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் உள்ள பணிபுரியும் அரசு மகளிர் தங்கும் விடுதியினை குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா? போதிய அளவில் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் அங்கு நோயாளிகளுக்கு போதிய அளவில் படுக்கை வசதிகள் உள்ளதா? மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிக்கு சென்று பார்வையிட்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பாளை நேரு கலையரங்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 2017-18-ம் ஆண்டில் நார்வே நாட்டில் இருந்து ரூ.4.29 கோடியில் புதிதாக மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெங்கு, மலேரியா நோய்களை கண்டறியும் முடியும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த மிஷினால் பயன் இல்லை என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த நோய்களை கண்டறிய ஒருவருக்கு 45 பைசா செலவு இருப்பதாகவும், ஆனால் இந்த மிஷின் மூலம் கண்டறிய ரூ.28 செலவு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இதில் தேவையில்லாமல் மத்திய அரசு பணத்தை வீணடித்துள்ளது.

தஞ்சாவூர், பாபநாசம், கன்னியாகுமரி உள்பட இதுவரை நாங்கள் ஆய்வு செய்த இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் கலாவதி தேதிகள் குறிப்பிடாத சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு யார் காரணம் என்பது குறித்து கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தெரிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினர்.

அப்போது கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள். அப்துல் வகாப், காந்திராஜன், சிந்தனை செல்வன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News