தமிழ்நாடு

பெற்றோருக்கு தெரியாமல் 52 பவுன் நகைகளை திருடி ஆடம்பர செலவு செய்த ஓட்டல் அதிபர் மகன்

Published On 2022-06-26 10:30 GMT   |   Update On 2022-06-26 10:30 GMT
  • நகை திருட்டு தொடர்பாக வீட்டில் வேலை பார்த்தவர்களிடமும், வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 9-ம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மதுரை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள தங்க நகைகளின் இருப்பை சோதித்துப் பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் வேலை பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவரது வீட்டில் 52 பவுன் தங்க நகைகளை குடும்பத்தினர் யாராவது திருடி இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஓட்டல் அதிபரின் 13 வயது மகன் நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது. அவர் அங்குள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்து வந்து உள்ளது.

கடந்த சில வாரங்களாக நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்து ஊர் சுற்றி வந்து உள்ளார். அதற்கான பணம் சிறுவனுக்கு எப்படி வந்தது? என்று தெரியவில்லை.

இதுபற்றி விசாரித்தபோது, ஓட்டல் அதிபர் தனது மகனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் சிறுவனிடம் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கில் பணம் புழங்கி உள்ளது. அவர் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி செலவு செய்துள்ளார்.

எனவே நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 9-ம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் சிறுவன் கூறும்போது, எனக்கு ஆன்லைனில் விளையாட அதிக பணம் தேவைப்பட்டது. எனவே உடன் படிக்கும் நண்பனிடம் கடன் கேட்டேன். அப்போது அவன் எனக்கு கோச்சடையில் அண்ணன் ஒருவரை தெரியும். அவரிடம் நகை கொடுத்தால் பணம் கொடுப்பார் என்று தெரிவித்தான்.

இதைத்தொடர்ந்து எங்கள் வீட்டில் பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகளை படிப்படியாக எடுத்து சென்று நண்பனிடம் கொடுத்து, கோச்சடையில் உள்ள ஒருவரிடம் பணம் பெற்று செலவு செய்து வந்தேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஓட்டல் அதிபர் செல்லப்பாண்டி மகன் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஓட்டல் அதிபர் வீட்டில் மகனே 52 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News