தமிழ்நாடு
தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட எச்.ராஜா.

பழனியில் எச்.ராஜா கைது- பா.ஜ.க.வினர் சாலை மறியலுக்கு பின் விடுதலை

Published On 2022-05-19 03:58 GMT   |   Update On 2022-05-19 03:58 GMT
பழனி நோக்கி வந்த எச்.ராஜாவை சத்திரப்பட்டியில் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பழனி:

பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கங்கா மகா ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு, பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். நிகழ்ச்சிக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர், பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்காக பழனி நோக்கி வந்த எச்.ராஜாவை சத்திரப்பட்டியில் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது போலீசாருக்கும், எச்.ராஜா ஆதரவாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரத்தி நிகழ்ச்சியில் தன்னை பங்கேற்க அனுமதி அளிக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். இதனிடையே செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயரையும் நெய்காரப்பட்டி அருகே வழிமறித்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்படவே பா.ஜ.க சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் எச்.ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பழனி கோவிலுக்கு செல்ல மட்டும் அனுமதி வழங்கினர். அதன்பின் இரவு 8 மணிக்கு எச்.ராஜா பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

பழனியில் இடும்பன் குளத்தில் ஆரத்தி விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து கோவில் சார்ந்த குளங்களிலும் ஆரத்திவிழா நடத்தப்படும். கோவில் நிலங்களில் பிற மதத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News