தமிழ்நாடு
தஞ்சை தேர் விபத்து

களிமேடு கிராமமே துக்கத்தில் பரிதவிக்கிறது- கிராம மக்கள் கண்ணீருடன் கதறல்...

Published On 2022-04-27 05:53 GMT   |   Update On 2022-04-27 05:53 GMT
இன்று எங்களுக்கு துக்க நாள். போன உயிரை திரும்ப பெற முடியாது. சிகிச்சை பெறுபவர்கள் குணமடைய வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை என்று மக்கள் கூறினர்.
தஞ்சாவூர்:

தேர் தீ விபத்து குறித்து திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறியதாவது:-

அப்பர்சாமி சித்திரை சதய விழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு விமர்சியையாக திருவிழா தொடங்கியது. சிறிய அளவிலான தேரை பொதுமக்கள் இழுத்து சென்றனர்.

தேர் நிலைக்கு வரும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. நிலை நிறுத்தும்போது எதிர்பாராதவிதமாக தேரின் மேல்பகுதி மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி மீது உரசியதில் தேர் எரிய தொடங்கியது. சட்டென்று தேரில் அமர்ந்திருந்தவர்கள், முன்பு நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி 11 பேர் இறந்து விட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தால் எங்கள் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளோம். இன்று எங்களுக்கு துக்க நாள். போன உயிரை திரும்ப பெற முடியாது. சிகிச்சை பெறுபவர்கள் குணமடைய வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனை.

94 ஆண்டுகளாக தேர் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் தற்போது தான் இதுபோல் துயர சம்பவம் நடந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத சம்பவம் இது. இனி இதுபோல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று கூறும்போது பொதுமக்கள் கண்ணீர் சிந்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News