தமிழ்நாடு
காணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது

காணும் பொங்கல் தினத்தில் மக்கள் வீடுகளில் முடக்கம் - சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது

Published On 2022-01-16 07:15 GMT   |   Update On 2022-01-16 07:15 GMT
காணும் பொங்கல் அன்று மெரினாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரை இன்று வெறிச்சோடிகளை இழந்து காணப்பட்டது.
சென்னை:

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமையான இன்று காணும் பொங்கல் தினமாகும்.

காணும் பொங்கல் அன்று மக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து பொதுஇடங்களில் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக இன்று முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதே நாளில் காணும் பொங்கலும் வந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

காணும் பொங்கல் அன்று சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் பல்லாயிரக்ணக்கில் திரண்டு மகிழ்ச்சியாக விளையாடி மகிழ்வார்கள்.

இதனால் காணும் பொங்கல் அன்று மெரினாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரை இன்று வெறிச்சோடிகளை இழந்து காணப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்து இருந்தனர். அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திலும் காணும் பொங்கல் அன்று மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இன்று அங்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காட்சி அளித்தது.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இல்லாத நிலையிலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்தார்.

இதே போன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கும் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், கொடநாடு காட்சி முனை என அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் விடுதி களிலேயே முடங்கினர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம், கோவை குற்றாலம், பரளிக்காடு வால்பாறையில் கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

ஊரடங்கு காரணமாக பவானிகூடு துறையிலும் இன்று பொதுமக்கள் புனித நீராட, பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி, பவானி சாகர் அணை பூங்கா செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போன்று ஏற்பாடு, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்தன.

தமிழகம் முழுவதும் இன்று சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்ததால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News