செய்திகள்
அரசு பஸ்சுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்

10 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கம்- பொதுமக்கள் கொண்டாட்டம்

Published On 2021-07-01 09:21 GMT   |   Update On 2021-07-02 12:39 GMT
மலைப்பட்டி கிராமத்திற்கு பஸ் இயக்க கோரி கிராம மக்களும் தொடர்ச்சியாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத நிலையே இருந்தது.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தின் வழியாக உள்ள வழித்தடத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அரசு பஸ் இயக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளப்பட்டி, வேப்பனூத்து கிராம மக்கள் பயனடைந்தனர். தினமும் 4 முறை அரசு பஸ்கள் சேவை இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

அவசர தேவைக்கு நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. மலைப்பட்டி கிராமத்திற்கு பஸ் இயக்க கோரி கிராம மக்களும் தொடர்ச்சியாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத நிலையே இருந்தது.

தொடர் கோரிக்கை காரணமாக மலைப்பட்டி கிராமத்துக்கு பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி இன்று முதல் மலைப்பட்டி கிராமம் வழியாக செல்லும் வழித்தடத்தில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து 10 ஆண்டுகளுக்கு பின் தங்களது கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் தொடர்ச்சியாக இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்கினால் கிராமப்புற மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும் எனவும் பஸ் சேவையை மீண்டும் தொடங்கிய அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News