செய்திகள்
கோப்பு படம்

துணை ஓட்டுச்சாவடிகள் உள்பட சென்னையில் 8,492 வாக்குச்சாவடிகள் தயார்

Published On 2021-04-05 07:38 GMT   |   Update On 2021-04-05 07:38 GMT
ஒவ்வொரு வாக்காளருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடை சரால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே முககவசம் வழங்கப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் நாளை சட்ட சபை தேர்தல் நடக்கிறது. சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 19,95,581 ஆண் வாக்காளர்கள், 20,60,698 பெண் வாக்காளர்கள், 1081 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 40,57,360 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த தேர்தல்களில் 901 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 3,754 வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து மொத்தம் 1,053 இடங்களில் 6,123 வாக்குச் சாவடிகளும், 2,369 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 8,492 வாக்குச் சாவடிகள் சென்னையில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் கழிவறை வசதி, குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் வாக்குச்சாவடி முன்பு நிழற்குடை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா பரவல் காரணமாக வாக்குச் சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க போதுமான கருவிகள், கையுறைகள், கிருமிநாசினிகள் ஆகியவையும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் மொத்தம் 13 பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு வாக்காளருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடை சரால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே முககவசம் வழங்கப்படுகிறது.

சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், முதியோர்களுக்கு உதவவும் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேர் என மொத்தம் 12 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடை பிடிக்க வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News