செய்திகள்
கோப்புப்படம்

குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் இரவோடு இரவாக மாற்றம்

Published On 2021-04-04 09:12 GMT   |   Update On 2021-04-04 09:12 GMT
ஒருதலை பட்சமாக செயல்படுதல், பணியில் அலட்சியமாக இருத்தல் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குனியமுத்தூர்:

கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் ஆகியோர் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து கலெக்டர் ராஜாமணி, கமி‌ஷனர் சுமித்சரண் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய கலெக்டராக நாகராஜன், போலீஸ் கமி‌ஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கலெக்டர் நாகராஜன் பதவி ஏற்ற 2-வது நாளிலேயே தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்த வால்பாறை தேர்தல் பணிப்பார்வையாளர் வெள்ளிங்கிரி மற்றும் வால்பாறை போலீஸ்காரர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொண்டு செல்லப்படுவதை பறிமுதல் செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருதலை பட்சமாக செயல்படுதல், பணியில் அலட்சியமாக இருத்தல் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியார். இவரிடம் தி.மு.க. பிரமுகரும், வக்கீலுமான மயில்வாகனன் பணம் வினியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க நேற்று இரவு வந்தார்.

அப்போது இன்ஸ்பெக்டர் பெரியார் தி.மு.க. பிரமுகரிடம் தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து வக்கீல் மயில்வாகனன் கோவை கலெக்டர் நாகராஜன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தார். இதனையடுத்து இரவோடு இரவாக இன்ஸ்பெக்டர் பெரியாரை கட்டப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News