செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரை

புரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீடிப்பு

Published On 2020-12-04 07:41 GMT   |   Update On 2020-12-04 07:41 GMT
வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, முட்டம், குளச்சல், கோடிமுனை, ராமன்துறை, வள்ளவிளை, தூத்தூர், நீரோடி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் தேவையின்றி வரக்கூடாது எனவும் எச்சரித்தனர்.

கன்னியாகுமரியில் கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. கடற்கரையையொட்டி உள்ள கடைகளும் மூடப்பட்டன. புயல் முன் எச்சரிக்கை காரணமாக குமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை விடப்பட்டது.

கன்னியாகுமரியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புரெவி புயல் தற்போது திசை மாறி சென்றாலும், கன்னியாகுமரியில் இன்றும் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணி நீடித்தது.

பொதுமக்கள் யாரும் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பெரும் மழை பெய்ததால் தண்ணீர் தேங்கும் ஆபத்தான பகுதிகளில் குடியிருந்த மக்கள் பேரிடர் மீட்பு முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

நாகர்கோவில், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் முதல் முகாம்களில் தங்கி இருந்தனர்.

தற்போது புயல் திசை மாறி சென்றதையடுத்து முகாம்களில் தங்கி இருந்தவர்கள் இன்று மீண்டும் வீடு திரும்பினர்.

Tags:    

Similar News