செய்திகள்
கைதான காசியம்மாள், அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் படத்தில் காணலாம்.

வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கொத்தனாரை கொன்றேன்- கள்ளக்காதலி வாக்குமூலம்

Published On 2019-12-02 16:14 GMT   |   Update On 2019-12-02 16:14 GMT
திட்டக்குடி அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கொத்தனாரை கழுத்து அறுத்து கொலைசெய்தேன் என்று கைதான கள்ளக்காதலி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), கொத்தனார். இவரது மனைவி சித்ரா. கடந்த 26-ந் தேதி காலையில் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மணிகண்டன் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை நடத்தினர்.

இதுபற்றி அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மணிகண்டனின் உறவினர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அனைவரிடத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
மணிகண்டனின் அண்ணியான வைய்யங்குடி காமராஜ் நகர் செல்வராஜ் மனைவி காசியம்மாள்(30) வைய்யங்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணியிடம் சரணடைந்தார்.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கைதான காசியம்மாள் போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

மணிகண்டனுக்கும் எனக்கும் கள்ளதொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்தோம். இந்த நிலையில் வேறு பெண்ணுடன் மணிகண்டனுக்கு தொடர்பு ஏற்பட்டதாக அறிந்தேன் கடந்த 26-ந் தேதி வீட்டில் மணிகண்டன் தனியாக இருந்தார். இதனை அறிந்து அங்கு நான் சென்றேன். அப்போது பெண் தொடர்பு பற்றி கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  உடனே நான் அங்கிருந்த கட்டையால், மணிகண்டனை தலையில் அடித்தேன். பின்னர் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

பின்னர்,  எனது  உறவினர்களான மூப்பனார் கோவில் தெரு பன்னீர்செல்வம்(57), புதுக்காலனி பெரியநாயகம் (35), செல்லம்மாள் (50) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது போன்று நாடகம் நடத்தி அனைவரையும் நம்ப செய்தோம். ஆனால் போலீசார் அவரது சாவில் சந்தேக மடைந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்து சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, காசியம்மாளுக்கு உடந்தையாக இருந்த உறவினர்களான பன்னீர்செல்வம், பெரியநாயகம், செல்லம்மாள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். 
Tags:    

Similar News