செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

சின்னசேலம் அருகே லாரி மீது கார் மோதல்- வங்கி ஊழியர் பலி

Published On 2019-11-24 05:53 GMT   |   Update On 2019-11-24 05:53 GMT
சின்னசேலம் அருகே நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சின்னசேலம்:

சேலம் அயோத்தியப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் இளவரசன் (வயது 28), கார்த்திக் (18), சின்னதிருப்பதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (26), சேலத்தை சேர்ந்தவர் யுவராஜ் (28), மன்னார் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28).

இவர்கள் 5 பேரும் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்கள். நேற்று விடுமுறையையொட்டி 5 பேரும் ஒரு காரில் புதுவை மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு அவர்கள் கடற்கரை மற்றும் பூங்காவுக்கு சென்றனர். அதன் பின்னர் இரவு 10 மணியளவில் அதே காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற கார் நள்ளிரவு 1 மணியவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர்-பங்காரம் இடையே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி சென்றது. திடீரென்று அந்த லாரி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டனர். காரில் பயணம் செய்த இளவரசன், தினேஷ், கார்த்திக், யுவராஜ், சுரேஷ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக இளவரசன், தினேஷ் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவையை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சவுந்தரராஜனை (33) கைது செய்தனர்.
Tags:    

Similar News