செய்திகள்
வேல்முருகன்

வல்லநாடு அருகே வக்கீல் கொலையில் வாலிபர் கைது

Published On 2019-08-12 07:22 GMT   |   Update On 2019-08-12 07:22 GMT
வல்லநாடு அருகே வக்கீல் கொலையில் வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் என்ற வீரப்பன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 27), வக்கீலான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வேல்முருகன் தனது வீட்டில் இருந்து சென்றார். அப்போது இடப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி செல்வம் தன் வீட்டிற்கு வேல்முருகனை அழைத்துள்ளார்.

இதனை நம்பிய வேல்முருகன், செல்வம் வீட்டிற்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் அந்த வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இந்தநிலையில் வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாக முறப்ப நாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்த சென்னல்பட்டி பகுதி முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

ஆனால் வேல்முருகன் எங்கும் கிடைக்கவில்லை. அவர் செல்வம் வீட்டிற்கு சென்ற தகவலறிந்த போலீ சார் அங்கு சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டிக்கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வேல்முருகன் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இடப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்து வதற்காக வேல்முருகனை, செல்வம்(28) தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது செல்வத்துடன் அதே ஊரைச்சேர்ந்த அருள் ராஜ், கால்வாய் பகுதியை சேர்ந்த மகேஷ் ஆகியோரும் இருந்துள்ளனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் செல்வம், அருள் ராஜ், மகேஷ் ஆகிய 3 பேரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் 3 பேரையும் பிடிக்க முறப்பநாடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் வலை வீசி தேடிவந்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் வாலிபர் செல்வம் அம்பை செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இங்கு வந்த போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.

போலீசில் செல்வம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘எனக்கும் வேல்முருகனுக்கும் நீண்டகாலமாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன் படாததால் வேல் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றோம்’ என கூறியுள்ளார்.

வக்கீல் வேல்முருகன் கொலையில் தொடர்புடைய அருள்ராஜ், மகேஷ் ஆகிய 2 பேரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News