செய்திகள் (Tamil News)

பேனரை அகற்ற புகார் கொடுத்த போது இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல் விடுத்தார்: டிராபிக் ராமசாமி புகார்

Published On 2017-10-14 06:37 GMT   |   Update On 2017-10-14 07:49 GMT
பேனரை அகற்ற புகார் கொடுத்த போது இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னை:

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது 83 வயதிலும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை நகரின் அழகை கெடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதை எதிர்த்து தனி ஆளாக வீதியில் இறங்கி போராடுகிறார்.

போக்குவரத்து பிரச்சினைகளுக்கும் கோர்ட்டில் வழக்கு போட்டு தீர்வு கண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் அண்ணா சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்ததுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டிராபிக் ராமசாமி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறார். இதுபற்றி டிராபிக் ராமசாமி கூறியதாவது:-

அரசியல் கட்சிகள் அண்ணா சாலையில் சட்ட விரோதமாக 200 பேனர்கள் வைத்துள்ளனர். சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனிலும் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது கிரிமினல் குற்றம். அபாயகரமான முறையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இதுபற்றி அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அங்கிருந்த போலீஸ்காரர்கள் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறு கூறினார்கள். இதனால் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தேன். அவரும் புகாரை வாங்க மறுத்துவிட்டார்.

அவரிடம் சாலையில் பேனர் வைப்பது கிரிமினல் குற்றம் நடவடிக்கை எடுங்கள் என்றேன். அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அடியாட்கள் மூலம் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர்களும் அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். என்னுடன் உதவிக்கு வந்த பெண்ணை அவதூறு வழக்கு போட்டு விடுவதாக மிரட்டினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News