செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட ஜவுளிக்கடையில் படத்தில் காணலாம்.

தேனியில் இன்று பிரபல ஜவுளி கடையில் தீ விபத்து

Published On 2017-06-25 05:23 GMT   |   Update On 2017-06-25 05:23 GMT
தேனியில் இன்று பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தேனி:

தேனியில் மதுரை ரோட்டில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. தரை, கீழ் தளத்துடன் 4 மாடிகள் கொண்ட இந்த ஜவுளிக்கடையில் அனைத்து பொருட்களும் உள்ளன. தரை கீழ் தளத்தில் பிளாஸ்டிக் மற்றும் பேன்சி பொருட்களும் அதற்கு மேல் உள்ள தளத்தில் பெண்களுக்கான துணிகளும் உள்ளன.

2-வது தளத்தில் பட்டு ரகங்களும், 3, 4-வது தளத்தில் ஆடவர்களுக்கான துணிகளும் உள்ளன. இன்று அதிகாலை தரை தளப் பகுதியில் திடீரென தீ படித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி புகை வெளியேறியது. இந்த ஜவுளிக்கடை அமைந்திருக்கும் சாலை தேனி-மதுரை பிரதான சாலையாகும்.

அந்த பகுதியில் செல்லும் வாகனம் தெரியாத அளவுக்கு புகை மண்டலம் காணப்பட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் கணேஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.

தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி போடி, கடமலைக்குண்டு ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் மின்னல் வேகத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டதால் மேல் தளத்தில் நெருப்பு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கீழ் தள பகுதியில் மட்டும் பிளாஸ்டிக், பேன்சி ரகங்கள் நாசமாகியது. இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. சேத மதிப்பு விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

சென்னையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு நாசமானது. இதே போல் தேனியிலும் அடுக்கு மாடி கொண்ட ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News