செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தைக்கு எதிரான மனு தள்ளுபடி

Published On 2017-04-25 11:45 GMT   |   Update On 2017-04-25 11:45 GMT
அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை:

புதுக்கோட்டை திருநல்லூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னதம்பி என்பவர் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஆவார்.

எனவே ஆளும் அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக விதிமுறைகள் மீறி சின்னதம்பிக்கு மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இவருக்கு ஒப்பந்த பணிகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னலூர், மதியான்டியா,மனமாடை உள்ளிட்ட கிராமங்களில் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் டெண்டர் விடப்பட்டது. இதில் தென்னனூர் கிராமத்தில் மட்டும் ரூ. 8 கோடி மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

ஒப்பந்த புள்ளியில் ஒப்பந்ததாரர் சின்னதம்பி குறிப்பிட்டதை விட 15 சதவீதம் குறைவாக ஒப்பந்த புள்ளி கோரியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் சின்னதம்பிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதுபோல் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் சின்ன தம்பிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 150 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு இழப்பு எற்பட்டுள்ளது.

எனவே விதி மீறி ஒப்பந்தம் வழங்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் கூறுகையில்,

மனுதாரர் இதே கோரிக்கையுடன், இதே நீதிமன்றத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். சில மனுக்களை திரும்ப பெற்றுள்ளார். உள் நோக்கத்துடன், தொழில் போட்டி காரணமாக மனு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.

மனுதாரர் இது குறித்து முறையாக அந்த மாவட்டத்தில் புகார் அளித்து நடவடிக்கை கோர வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதை தொடர்ந்து மனுதாரர் மனுவை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்திரவிட்டனர்.

Similar News