செய்திகள்

தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நோக்கில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது: திருச்சி சிவா

Published On 2017-04-22 04:44 GMT   |   Update On 2017-04-22 04:44 GMT
தமிழக மாணவர்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இந்த நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது என திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஓப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி சமத்துவ கல்வி கூட்டமைப்பினர் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை திருச்சி சிவா எம்.பி. தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை முறையானது மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நடந்து வந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் மத்திய அரசு நடத்துகின்ற பள்ளிகளான சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகிறது. இதனால் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் படிக்கின்ற ஏழை மற்றும் கிராமபுற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த நீட் தேர்வை நாம் எதிர்க்கிறோம்.

தமிழக மாணவர்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இந்த நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. மத்திய அரசு நடத்துகின்ற நவோதயா பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரம் செலவு செய்கிறது. தமிழக அரசோ, தமது பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.22 ஆயிரம் மட்டுமே செலவழிக்கிறது.

இந்த இரண்டு வகையான மாணவர்களையும் சமநிலையில் வைத்து ஒரே வகையான நுழைவு தேர்வு நடத்துவது நீதியானதா? எனவே நீட் தேர்வு சமத்துவத்திற்கு எதிரானது. சமவாய்ப்புகள் இல்லாதபோது, தேர்வில் மட்டும் சமத்துவம் என்பது அநீதியானது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று நான் பாராளுமன்றத்தில் பேசி உள்ளேன். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் பிரதமரை சந்தித்து பேசி உள்ளேன். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது அனைத்து கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்துக்கு ஜனாதிபதி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கான வேலையை தமிழக அரசு செய்யவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்களுடைய நாற்காலியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசன சட்டத்தின்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே இதற்கு ஒப்புதல் அளித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதை செய்ய தவறி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News