செய்திகள்
எழும்பூரில் கொள்ளை நடந்த வணிக வளாகம்

எழும்பூர் வணிக வளாகத்தில் 14 கடைகளில் கொள்ளை

Published On 2017-04-15 09:55 GMT   |   Update On 2017-04-15 09:55 GMT
எழும்பூர் வணிக வளாகத்தில் உள்ள 14 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

எழும்பூர் பாந்தியன் சாலை மியூசியம் எதிரே ‘டிரெசர் ஐலேண்டு’ என்ற வணிக வளாகம் உள்ளது.

இந்த வணிக வளாகம் அடித்தளம், கீழ்தளம், முதல்- தளம் ஆகியவற்றை கொண்டது. இங்கு 35 கடைகள் உள்ளன.

செல்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிகள் பொருட்கள் கடையே இந்த வணிக வளாகத்தில் அதிகமாக இருந்தன. மேலும் துணிக்கடைகளும் இருந்தன.

நேற்று விடுமுறை என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 14 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். இதே போல கடைகளில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் பணமும் கொள்ளை போய் இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மோப்ப நாயுடன் அங்கு வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். கொள்ளை நடந்த இடங்களில் போலீசார் மோப்ப நாயுடன் சோதனை செய்தனர். ஒரே கும்பல் இந்த 14 கடைகளிலும் கைவரிசை காட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வணிக வளாகத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News