செய்திகள்

எந்த உத்தரவு பிறப்பித்தாலும் கவர்னர், என்னை கலந்து ஆலோசிக்க வேண்டும்: நாராயணசாமி பேட்டி

Published On 2017-04-02 14:34 GMT   |   Update On 2017-04-02 14:34 GMT
யூனியன் பிரதேச விதிப்படி கவர்னர் நிர்வாகம் தொடர்பாக எந்த உத்தரவை பிறப்பித்தாலும் என்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை நகராட்சி ஆணையாளர் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். உரிமை மீறல் புகார் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது சபாநாயகர் ஒரு தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் ஆணையாளர் தொடர்பான உரிமை மீறல் விசாரணை முடியும் வரை அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

சபாநாயகர் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது எங்கள் அரசின் பொறுப்பு. சட்ட விதி 312-ன் படி சபாநாயகரின் முடிவே இறுதியானது. இதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

அவர் உத்தரவை நாங்கள் நிறைவேற்றாவிட்டால் சட்டவிதியை மீறியவர்கள். எங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான முழு பொறுப்பும் என்னையே சார்ந்தது. இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

சபாநாயகரின் முடிவுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். சபாநாயகர் உத்தரவை மீறியதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்.கள் சிறைக்கே சென்றுள்ளனர். இத்தகைய விபரீத விளைவுகளை சந்திக்க நான் விரும்ப வில்லை. எனவே, சபாநாயகர் உத்தரவை நிறைவேற்றினோம்.

அரசியல் சாசன சட்டப்படி ஒருவரை பணி அமர்த்துவது, பதவிக்கான விதிமுறைகளை வகுப்பதற்கே ஜனாதிபதி ஒப்புதல் பெற்றாக வேண்டும். மற்ற பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் அனைத்தையும் முதல்- அமைச்சரும், அமைச்சரும் முடிவெடுக்கலாம்.

யூனியன் பிரதேச விதிப்படி கவர்னர் நிர்வாகம் தொடர்பாக எந்த உத்தரவை பிறப்பித்தாலும் முதல்-அமைச்சரை கலந்து ஆலோசிக்க வேண்டும். எனவே, கவர்னர் நிர்வாகம் தொடர்பாக எந்த உத்தரவை பிறப்பித்தாலும் என்னிடம் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை, பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

சட்டசபையில் உறுப்பினர்கள் கவர்னர் தொடர்பாக பிரச்சினை எழுப்பி பேசினர். அவரை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினார்கள். ஆனால் நான் தலையிட்டே கவர்னர் நீக்கம், மாற்றம் தொடர்பாக பேசக்கூடாது என்றும், தீர்மானம் வேண்டாம் என்றும் கூறினேன். இதனால்தான் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

நம் மாநிலத்தை பொறுத்தவரை தலைமை செயலாளர், செயலாளர், இயக்குனர்கள் விதிமுறைப்படியே நடக்கின்றனர். நாங்களும் சட்டவிதிமுறைகளை பின்பற்றியே நடக்கிறோம். சபாநாயகர் உத்தரவை மீறினால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தும். இந்த பிரச்சினை தொடர்பாக தலைமை செயலாளர் என்னிடம் பேசினார். அவரிடம் நான் முழு பொறுப்பேற்பதாக உறுதியளித்துள்ளேன். இது தொடர்பாக கவர்னருக்கும் கடிதம் அனுப்பினேன். ஆனால், அவர் எந்த பதிலும் தரவில்லை. யாராக இருந்தாலும் அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட வரைமுறைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறையிடம் இருந்து முறைப்படி கடிதம் விரைவில் வரும். அதன்பிறகு ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை முழுமையாக அமல்படுத்த போலீசார், வட்டார போக்குவரத்து துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க நாளை அமைச்சரவை கூடுகிறது. அதில் உரிய முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News