செய்திகள்

பவானி ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளம்

Published On 2017-03-22 11:07 GMT   |   Update On 2017-03-22 11:07 GMT
பில்லூர் அணையில் நேற்று காலை மற்றும் மாலையில் மின் உற்பத்திக்காக ஒரு மோட்டார் இயக்கப்பட்டது. மின் உற்பத்திக்கு பின்னர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. அணைக்கு வினாடிக்கு 11.31 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 80 அடியை தொட்டது. 73 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே வாரத்தில் 7 அடி உயர்ந்து 80 அடியாக உள்ளது.

இந்தநிலையில் பில்லூர் அணையில் நேற்று காலை மற்றும் மாலையில் மின் உற்பத்திக்காக ஒரு மோட்டார் இயக்கப்பட்டது. மின் உற்பத்திக்கு பின்னர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

இந்த மழை வெள்ளம் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் அருகில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் பவானி ஆற்றுப் பாலம் அருகே கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஆற்றின் கரையோர பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஏற்கனவே வருவாய்த்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News