செய்திகள்
வனப்பகுதியில் சுற்றித் திரியும் கரடி ஒன்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதை படத்தில் காணலாம்.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தண்ணீரை தேடி சுற்றித் திரியும் 20 கரடிகள் கண்காணிப்பு

Published On 2017-03-20 09:57 GMT   |   Update On 2017-03-20 09:57 GMT
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தண்ணீரை தேடி 20 கரடிகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சுற்றி வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதைத் தவிர கரடிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதின் காரணமாக யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீருக்காக பரிதவிக்கின்றன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வன ஊழியர்கள் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக தண்ணீர் நிரப்பி வருகிறார்கள்.

இந்த தண்ணீரை யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வந்து தினமும் குடித்து வருகின்றன. இதைத் தவிர தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமஏரி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இருப்பதால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீருக்காக இந்த ஏரிக்கு வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் அந்த கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் பார்த்தனர். அதில் 20-க்கும் மேற்பட்ட கரடிகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தண்ணீருக்காக சுற்றித் திரிவது தெரிய வந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பர்கூர், வேப்பனப்பள்ளியையொட்டி உள்ள வனப்பகுதியில் கரடிகள் அதிக அளவில் உள்ளன. தேன்கனிக்கோட்டை பகுதியில் மிகவும் குறைந்த அளவே கரடிகள் உள்ள நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்ட கரடிகள் வனப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கரடிகள் இரவு நேரத்தில் தண்ணீருக்காக வனப்பகுதியில் உள்ள தொட்டிகளை தேடி வருகின்றன. அந்த தொட்டிகளில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை கரடிகள் குடித்து விட்டு செல்கின்றன. தற்போது வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலமாக வனப்பகுதியில் உள்ள விலங்குகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஏராளமான வன விலங்குகள் இங்கு இருப்பதால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் அச்சடித்து வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு மேல் வனப்பகுதியையொட்டி யாரேனும் நடந்தோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News