செய்திகள்

செல்போனுக்கு ஆசைப்பட்டு என் மகன் உயிரை பறித்துவிட்டனர்: பெற்றோர் கதறல்

Published On 2017-03-13 04:38 GMT   |   Update On 2017-03-13 05:24 GMT
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து ஆடிட்டர் ஆக ஆசைப்பட்டான். ஆனால் அவனது ஆசை கனவை செல்போனுக்கு ஆசைப்பட்டு வழிப்பறி கும்பல் உயிரை பறித்து விட்டனர் என்று மாணவனின் பெற்றோர் கூறினர்.
மதுரை:

மதுரையில் பிளஸ்-2 மாணவர் நாகராஜ் நள்ளிரவில் வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அறிந்ததும் அவரது தந்தை குமரேசன் பாபு, தாயார் கிரிஜா ஆகியோர் விரைந்து வந்து நாகராஜின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

நாங்கள் நேற்று மாலை குடும்பத்தோடு வண்டியூரில் உள்ள எனது தாயார் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக சென்றோம். பின்னர் நானும், எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து விட்டோம். இரவு நீண்ட நேரமாகியும் நாகராஜ் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவனது செல்போனில் தொடர்பு கொண்டேன். 2 சிம்கார்டு கொண்ட செல்போனை நாகராஜ் வைத்திருந்தான். ஒரு சிம்கார்டு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இன்னொரு எண்ணில் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் பேசிய நபர் இந்த சிம்கார்டு கீழே கிடந்ததாகவும், அதை எடுத்து சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்க முற்பட்டபோது தாங்களே பேசி விட்டீர்கள் என்றும் தெரிவித்தார்.

எந்த இடத்தில் சிம்கார்டு கிடந்தது என்று நான் கேட்டபோது அந்த நபர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தபோது எனது மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். எனது ஆசை மகன் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தேன். யாரிடமும் அதிகமாக பேச மாட்டான். நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் யாரும் இல்லை.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து ஆடிட்டர் ஆக ஆசைப்பட்டான். ஆனால் அவனது ஆசை கனவை செல்போனுக்கு ஆசைப்பட்டு வழிப்பறி கும்பல் உயிரை பறித்து விட்டனர். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக் கூடாது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கொலையாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுதர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொலையுண்ட மாணவர் நாகராஜின் உடன் பிறந்த சகோதரி சண்முகப்பிரியா. அவரும் நாகராஜின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Similar News