செய்திகள்

நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-03-01 10:13 GMT   |   Update On 2017-03-01 10:13 GMT
நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்தனர்.
திண்டுக்கல்:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்றே இந்த போராட்டத்துக்கும் கல்லூரி மாணவர்களும், தன்னார்வ அமைப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ. கல்லூரியைச் சேர்நத 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி முன்பு போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் தங்கள் கைகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டையை வைத்திருந்தனர்.

மத்திய அரசுக்கு எதிராகவும், கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதியான முறையில் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழர்களின் உணர்வு சார்ந்த பிரச்சினைக்காக எங்கள் ஆதவை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனால் போலீசார் அங்கிருந்து சென்றனர். பாதுகாப்புக்காக மட்டும் ஒரு சில போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நெடுவாசல் போராடத்துக்கு கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மேலும் பல கல்லூரிகள் போராட்டத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News