செய்திகள்
தாயின் அரவணைப்பில் கடத்தப்பட்ட குழந்தை.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்குழந்தையை கடத்திய பெண் சிக்கினார்

Published On 2017-02-24 11:18 GMT   |   Update On 2017-02-24 11:18 GMT
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய பெண் கையும், களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அரசம் பாளையத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அமுதா. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அமுதாவுக்கு உதவியாக அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.

நேற்று இரவு நேரம் என்பதால் அமுதா மற்றும் குழந்தையை தவிர மற்ற உறவினர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் வார்டுக்கு வெளியே இருக்கும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் வெளியே இருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அமுதாவிடம் வந்த ஒரு பெண் குழந்தையை டாக்டர் எடுத்து வரசொன்னார் என்று கூறி குழந்தையை எடுத்து சென்றார்.

  குழந்தையை கடத்திய சரஸ்வதி.

அப்போது பக்கத்து பெட்டில் இருந்த ஒரு பெண், குழந்தையை இந்த நேரத்துக்கு டாக்டர் எடுத்து வர சொல்ல மாட்டார்களே என்றார். இதைகேட்டு உஷாரான அமுதா இது குறித்து வார்டுக்கு வெளியே இருந்த தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது ஒரு பெண் குழந்தையுடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்ல முயன்றார்.

அப்போது அமுதாவின் உறவினர்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் குழந்தையை மீட்டனர்.

போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது சரஸ்வதி என்று மட்டும் தெரிவித்தார். மேலும் எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். ஆனாலும் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பின்னர் மீட்கப்பட்ட குழந்தை, தாய் அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் குழந்தையை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News