செய்திகள்

வேலூரில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பலத்த பாதுகாப்புடன் நடந்தது

Published On 2017-02-21 16:07 GMT   |   Update On 2017-02-21 16:07 GMT
வேலூரில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. ஆபிஸ் சாலையில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நீலோபர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கை கழுவும் பயிற்சி நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. முழு சுகாதார பணி செய்ததால் நோய் தாக்கம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக வேலூர் திகழ வேண்டும். பன்றிக்காய்ச்சல் பல்வேறு காரணிகளால் பரவினாலும் கை கழுவும் பழக்கத்தால் 85 சதவீதம் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எனவே மாணவ- மாணவிகள் கை கழுவும் பயிற்சியை பெற்று பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 14 லட்சம் மாத்திரைகளும், 21 ஆயிரம் மருந்துகளும், பாதுகாப்பு கவசங்களும் தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர், எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி. பார்த்திபன், பாலசுப்பிரமணி, ஜெயந்தி பத்மநாபன், லோகநாதன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமைதாங்கி ஏழுமலை, புகழேந்தி, தாஸ், ஏ.பி. எல். சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக வலை தளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் பங்கேற்றதால் அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

எனவே நிகழ்ச்சி நடந்த இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News