செய்திகள்

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Published On 2017-01-21 05:43 GMT   |   Update On 2017-01-21 05:43 GMT
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு உள்ளன. மாடுபிடி வீரர்களும் அதற்காக சிறப்பு பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

மதுரை:

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதி கிடைத்ததும் போட்டி நடத்தப்படும் என வாடிவாசலை பார்வையிட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

பீட்டாவின் எதிர்ப்பு, உச்சநீதிமன்றம் தடை ஆகியவற்றின் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை. இந்த ஆண்டும் அனுமதி கிடைக்காத நிலையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதற்கிடையில் அனுமதியோடு வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடிக்க, தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.

இந்த சூழலில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதன்படி அவசர சட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் உள்ளது.

அவரது ஒப்புதல் இன்றே கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு உள்ளன.

அலங்காநல்லூர் வாடிவாசல் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் அங்கு வந்து வாடிவாசலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

இதேபோல் பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் அதற்காக சிறப்பு பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் தற்காலிகமாக ஒவ்வொரு ஆண்டும் அமைப்பார்கள். தற்போது அந்த பணிகளை செய்யவும் தயார் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

எனவே மதுரை மாவட்டம் தற்போது ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது.

Similar News